தூத்துக்குடி – பிப் -03,2023
Newz – webteam
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக “மாற்றத்தை தேடி” மற்றும் “பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று (02.02.2023) செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் PMS மஹாலில் வைத்து “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியும், “பள்ளிக்கு திரும்புவோம்” என்ற பெற்றோர்-மாணவர் விழிப்பணர்வு நிகழச்சியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான, வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கச் செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும், கடந்த 24.04.2022 அன்று “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி முதன் முதலாக இதே இடத்தில் தான் துவங்கப்பட்டது. இன்று வரை 2643 மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு சுமார் 76,427 பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
கோபத்தினால் ஒருவன் குற்றம் செய்வதை விட தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பவன் தான் உண்மையான வீரன். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாகவும் பழக கற்றுக் கொடுக்க வேண்டும். எப்போதும் நாம் இரண்டு விஷயங்கள் உடனடியாக செய்ய கற்றுக்கொள்ள வேண்டும், ஒன்று பிறர் நமக்கு உதவி செய்தால் அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், மற்றொன்று நாம் செய்த தவறுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும், இந்த இரண்டு விஷயங்களும் வாழ்க்கையில் மிக முக்கியமானவை.
ஒருவன் கோபத்தினாலும், அவசரத்தினாலும் செய்யும் தவறுகள் மூலம் தண்டனை பெற்று வாழ்க்கையை இழப்பதை விட தன் குடும்பத்தினருக்காகவும் தனக்காகவும் பிறரிடம் அன்பாகவும் அமைதியாகவும் இருந்து வாழக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை நன்றாக அமையும். ஒருமுறை ஒருவர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர் அரசு வேலைக்கோ, தனியார் வேலைக்கோ அல்லது வெளிநாட்டில் வேலைக்கோ செல்வதற்கு பிரச்சனை ஏற்படுவதுடன் தங்கள் வாழ்க்கையும் தொலைக்க நேரிடும், அதை இளைஞர்கள் கண்டிப்பாக உணர வேண்டும், விளையாட்டுகளுக்கு எப்படி விதிமுறைகள், எல்லைகள் மற்றும் வெற்றி இலக்கு உள்ளதோ, அதே போன்று வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். எவன் ஒருவன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் போது ஆசிரியருக்கு கட்டுப்பட்டும், எப்போதும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பவன்தான், அவன் சமூகத்திற்கு தானாக கட்டுப்பட்டு தனது வாழ்க்கையில் முன்னேறுவான். தங்கள் பகுதிகள் மற்றும் கிராமங்களில் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உங்கள் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் ‘பள்ளிக்குத் திரும்புவோம்” நிகழ்ச்சி என்பது தங்கள் பகுதிகளில் இளம் வயதில் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பள்ளி படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இளம் வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திய குழந்தைகள் அல்லது இளைஞர்கள் குற்ற செயலில் ஈடுபடுவதால் அவர்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும், அதுபோன்று உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அவர்களின் பள்ளி படிப்பிற்கு வழிவகை செய்ய வேண்டும். அதற்கு பள்ளி கல்வித்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உதவியாக இருக்கும்.
தற்போது இளைஞர்கள் சிறிய விஷயங்களுக்காக கூட தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகிறார்கள். தற்கொலை எண்ணம் ஒருவருக்கு வந்தாலே உடனடியாக அவர் மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது சிறந்ததாகும்.
அதே போன்று இளைஞர்கள் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள், ஆன்லைனில் வரும் வேலை வாய்ப்பு மற்றும் பரிசுத்தொகை விழுந்தது போன்ற ஆன்லைன் செயல்பாடுகள் எதிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் உங்கள் பணமும் காலமும் வீணாகி தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் தற்கொலை செய்து கொள்வதுவரை தற்போது நிகழ்ந்து வருகிறது. அவற்றை இளைஞர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மேலும் தங்கள் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதை உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் அதுகுறித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் இது போன்று பொதுமக்கள் தகவல் தருவதற்காக 83000 14567 என்ற எண்ணையும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
எனவே பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றங்கள் இல்லாமலும், அமைதியாகவும் சிறப்பாகவும் அமைக்க ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டு தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியின் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீவைகுண்டம் அன்னராஜ், செய்துங்கநல்லூர் பத்மநாபபிள்ளை, ஆழ்வார்திருநகரி மணிவண்ணன், ஸ்ரீவைகுண்டம் குற்றப் பிரிவு ராமகிருஷ்ணன், ஏரல் மேரி ஜெமிதா, ஸ்ரீ;வைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் லெட்சுமி பிரபா உட்பட காவல்துறையினர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், ஸ்ரீவைகுண்டம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன் உட்பட பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.