தூத்துக்குடி – பிப் -04,2023
Newz – webteam
புதியம்புத்தூர் பிரசன்னா பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் ஜோதியேற்றி வைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரசன்னா பள்ளியில் இன்று பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விளையாட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார், அதனை தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இந்த பள்ளி விளையாட்டு விழா என்பது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒருங்கிணைந்து நடத்தக் கூடிய விழாவாகும், விளையாட்டு போட்டியில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல, முழு மனதுடன் விளையாடுவது என்பதே முக்கியம், உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கல்வியோடு கூடிய விளையாட்டுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு செல்வம் சேர்த்து வைத்திருக்கீறீர்கள் என்பதை விட, அவர்களுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை கொடுத்திருக்கீறீர்கள் என்பது தான் முக்கியம். அதே போன்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பல்வேறு ஆலோசனைகளையும், ஊக்கங்களையும் வழங்குவது மிக முக்கியம். தங்கள் குழந்தைகளை இதுதான் படிக்க வேண்டும் என்பதை விட அவர்களுக்கு என்னென்ன திறமைகள் இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல் கல்வியை வழிநடத்துவது சிறந்தது.
அதே போன்று குழந்தைகள் கல்வி பயன்பாட்டிற்கு செல்போன் பயன்படுத்தும் போது அவற்றை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும், குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வழிநடத்துவது மட்டுமின்றி, அவர்கள் மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதையும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும், குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களாக வரவேண்டும் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் உட்பட காவல்துறையினர் மற்றும் பிரசன்னா பள்ளி மேலாளர்கள் பிரசாந்த், சந்திப் உட்பட பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.