நெல்லை மாநகரம் – ஜன -06,2023
Newz – webteam
நெல்லையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அடியோடு ஒழிக்கப்படும் என்று புதிய கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்ட ராஜேந்திரன் கூறினார்.
தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடி மாற்றம் செய்து தமிழக அரசு கடந்த 1ம் தேதியன்று உத்தரவு
பிறப்பித்திருந்தது. நெல்லை, மதுரை மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். நெல்லை மாநகர ஆணையராக பணியாற்றி வந்த அவினாஷ் குமார் சென்னைக்கு மாற்றப்பட்டார். நெல்லை
மாநகர காவல்துறை ஆணையராக சென்னை நகர போக்குவரத்து போலீஸ் இணைக் கமிஷனராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.
ராஜேந்திரன் இன்று நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதற்கான கோப்புக்களில் கையெழுத்திட்டு தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, ‘‘நெல்லை பகுதியில் பணியாற்றுவது இதுவே முதல்முறை. சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவேன். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவேன். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தாராளமாக எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல்
தெரிவிக்கலாம். அது ரகசியமாக வைக்கப்படும். மாணவர்கள் போதைப்பழக்கத்தில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்கப்படும். கஞ்சா குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களின் விற்பனை
அடியோடு ஒழிக்கப்படும். நெல்லை மாநகரத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யார் இந்த ராஜேந்திரன்….
நேர்மைக்கு பெயர் போன ராஜேந்திரன் பிறந்த ஊர் காஞ்சிபுரம். எம்ஏ முதுகலைப்பட்டதாரி. கடந்த 1998ம் ஆண்டு நேரடி டிஎஸ்பியாக தமிழக காவல்துறையில் கால்பதித்த இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை சப் டிவிஷன் டிஎஸ்பியாக தனது முதல் காவல் பணியை தொடங்கினார். அதன் பிறகு ஓமலூர், சாத்தூர் மற்றும் கோர்செல் பிரிவில் பணியாற்றினார். பின்னர் ஏடிஎஸ்பியாக பதவி உயர்ந்து விருதுநகரிலும், அதனையடுத்து எஸ்பியாக ஈரோடு சிறப்பு அதிரடிப்படையிலும் அதனையடுத்து கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களிலும் பணியாற்றினார். மேலும் கோவை, திருச்சி, சென்னை மயிலாப்பூர், மாதவரம், கீழ்ப்பாக்கம், பூக்கடை ஆகிய காவல் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராகவும் திறம்பட பணிபுரிந்தார்.
2006ம் ஆண்டு ஐபிஎஸ் அந்தஸ்தை எட்டிய ராஜேந்திரன் 2019ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று மதுரை சரக டிஐஜியாக பணியமர்த்தப்பட்டார். அதனையடுத்து டிஜிபி அலுவலகத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் சில மாதங்கள் அதன் பின்பு சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டார். பின்பு சென்னை கிழக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து இணைக்கமிஷனராக திறம்பட பணிபுரிந்தார் ராஜேந்திரன். ராஜேந்திரன் தனது மெச்சத்தகுந்த காவல் பணிக்காக கடந்த 2018ம் ஆண்டு குடியரசு தலைவரின் பதக்கம் பெற்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.