தூத்துக்குடி – நவ -26,2022
Newz – webteam
நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவிப்பு விடுத்துள்ளார்.
2022-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைகாவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர், (ஆண் மற்றும் பெண்) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான (ஆண்), மற்றும் மூன்றாம் பாலினம் ஆகியோர் அடங்கிய விண்ணப்பதாரர்களுக்கு நாளை எழுத்துதேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி, புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, வ.உ.சி கல்லூரி, காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி (பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்), சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி (பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்) ஆகிய 8 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த எழுத்து தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 9388 ஆண் விண்ணப்பதாரர்கள், 2249 பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் உட்பட மொத்தம் 11641 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்:
1. விண்ணப்பதாரர் தேர்வுக்கூட சீட்டினை இவ்வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த பின்னர் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கவும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் மாற்றங்கள் இருந்தால் இவ்வாரிய உதவிமையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
2. தேர்வுக்கூட சீட்டில் பிறந்த தேதி அல்லது வகுப்பு வாரி பிரிவில் ஏதேனும் மாற்றம் இருந்தால் விண்ணப்பதாரர் தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று எழுத்துத் தேர்வின் போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. இத்தேர்வுக்கூட சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமலிருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமலிருந்தாலோ விண்ணப்பதாரர் தனது பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தினை ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வரவேண்டும்.
4. விண்ணப்பதாரர் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார். தேர்வு மையத்தினை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது.
5. தேர்வுக்கூட சீட்டினை கொண்டுவராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்.
6. தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.
7. தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
8. விண்ணப்பதாரர் விடைத்தாளில் பட்டை தீட்ட /எழுத நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
9. செல்போன், கால்குலேட்டர் மற்றும் ப்ளுடூத் போன்ற எலக்ட்ரானிக்கருவிகள் (அல்லது பிற மின்சாதன பொருட்கள்) தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும்.
10. விண்ணப்பதாரர் தேர்வு முடியும் வரை தேர்வுக்கூட அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.
11.தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ, பார்த்து எழுதவோ கூடாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும்.
மேலும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவித்துள்ளார்.