தூத்துக்குடி – டிச -16,2021
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இருவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் அழைத்து அவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாரட்டினார்.
கடந்த 10.12.2021 அன்று மாரிசுந்தர் த/பெ. மூர்த்தி, சண்முகபுரம், வீரபாண்டியபட்டினம் திருச்செந்தூர் என்பவர் திருச்செந்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் வைத்து தான் வைத்திருந்த மணிபர்ஸை தவறவிட்டுள்ளார்.
அதில் ரூபாய் 1650/- பணம் வைத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வீரபாண்டியபட்டினம் பிரசாத் நகர் பகுதியை சேர்ந்தவர்களான இசக்கிமுத்து, த/பெ. வரதராஜன் மற்றும் நல்லதம்பி, த/பெ. வேலாயுதம் ஆகிய இருவரும் மேற்படி மணிப்பர்ஸ் கீழே கிடப்பதை பார்த்து, அதை எடுத்து நேர்மையுடன் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து திருச்செந்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் காமராஜ் என்பவர் அதன் உரிமையாளரை கண்டுபிடித்து, திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் மூலமாக அந்த மணிப்பர்ஸை, அதன் உரிமையாளரான மாரிசுந்தர் என்பவரிடம் ஒப்படைத்தார்.
மேற்படி மணிப்பர்ஸை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேற்படி இசக்கிமுத்து மற்றும் நல்லதம்பி ஆகியோரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இசக்கிமுத்து மற்றும் நல்லதம்பி ஆகியோரை நேரில் அழைத்து, அவர்களை கௌரவித்து சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாரட்டினார்.