தூத்துக்குடி – டிச -10,2021
தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, புதியம்புத்தூர், தட்டப்பாறை, சிப்காட் மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதற்கு முன்னதாக அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தை பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடியில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, தடைசெய்யபட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ் குமார், பவித்ரா, சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.