தூத்துக்குடி – நவ – 10,2021
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி வடகிழக்கு பருவமழை மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் மீட்புப் படையினரின் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து ஆங்காங்கே கனமழை பெய்து வருவதை முன்னிட்டு தமிழகம் முழுவது பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசாரை தயார் நிலையில் வைப்பதற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, இ.கா.ப உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பேரிடர் கால மீட்பு படையினர் (State Disaster Rescue Force) மற்றும் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்டங்களிலும் அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் இதற்கென போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு, குளங்களில் வெள்ளம் போய்க்கொண்டு இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் ஆறு, குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ள காற்றடைத்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் (Inflatable lights), வலுவான தூக்குப்படுக்கைகள் (Fortable Stretcher), ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, கடப்பாறை, மண்வெட்டி, கோடாரி, அரிவாள், நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலி பெருக்கி உட்பட 18 வகை உபகரணங்களை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு. மணிகண்டன், மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் விளாத்திகுளம் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சேகர் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.