கன்னியாகுமரி – நவ -14,2021
மழை வெள்ளத்தினால் சூழ்ந்துள்ள பகுதிகளில் காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு IPS ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு IPS குமரி மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பூதப்பாண்டி, இரணியல், குளச்சல், முஞ்சிறை, நித்திரவிளை, அஞ்சுகிராமம்,சுசீந்திரம், திருப்பதிசாரம்,தோவாளை என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார் . மாவட்டம் முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் SDRF, STF, COMMANDO வீரர்களைக் கொண்ட 45 அணிகளை சேர்ந்த 865 காவலர்களை நேரில் நேற்று சந்தித்து முதலுதவி மற்றும் துரிதமாக மீட்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களை மீட்டு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களை முகாம்களில் தங்க வைத்த காவலர்களை வெகுவாக பாராட்டினார். மழைக்காலத்தில் பொதுமக்கள் அனைவரும் தாழ்வான பகுதிகளில் தங்கியிருக்க வேண்டாம் என்றும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தாழ்வான பகுதியில் நிறுத்த வேண்டாம் என்றும், பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.