தூத்துக்குடி – நவ – 26,2021
உடல் நலக்குறைவால் காலமான தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் செல்வகுமார் அவர்களின் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் செல்வகுமார் (56) என்பவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர்.
இவர் 1988ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 33 ஆண்டுகள் சிறப்பான முறையில் பணியாற்றி பதவி உயர்வுகள் பெற்று, தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அன்னாரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார்.
இதில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.