தூத்துக்குடி – நவ -29,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடந்த 26.11.2021 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 1,10,00,000/- மதிப்புள்ள முந்திரி பருப்புகளை ஏற்றி வந்த ரூபாய் 10,00,000/- லட்சம் மதிப்புள்ள கண்டெய்னர் லாரியை வழிமறித்து ஒட்டுநரை தாக்கி கடத்தி சென்று கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட எதிரிகளை சம்பவம் நடைபெற்ற சில மணிநேரங்களில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 500 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணித்து விரட்டி சென்று எதிரிகளை கைது செய்து களவுபோன சொத்துக்களையும் கைப்பற்றிய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், சைபர் குற்ற பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகரன், சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், புதுக்கோட்டை காவல் நிலைய தலைமை காவலர்கள் சிவசக்திவேல், லெட்சுமணன், முறப்பநாடு காவல் நிலைய தலைமை காவலர் சுந்தர்ராஜ், சிப்காட் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ், புதுக்கோட்டை காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திகேயன், தட்டாப்பாறை காவல் நிலைய முதல் நிலை காவலர் கணேசன், புதுக்கோட்டை காவல் நிலைய காவலர் மீனாட்சிசுந்தரம், சைபர் காவல் நிலைய காவலர் பேச்சிமுத்து மற்றும் தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் சசிகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
காயல்பட்டினம் பகுதிகளில் சட்ட விரோதமாக தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து தலைமைறைவாக இருந்து வந்த எதிரியின் இருப்பிடத்தை அவரது செல்போன் எண் மூலம் கண்டுபிடித்து கைது செய்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்தும்,
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய 4 எதிரிகளை கைது செய்து ரூபாய் 6,00,000/- லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்ய உதவியாக இருந்த திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ராஜ்குமார், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய தலைமை காவலர் இசக்கியப்பன் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வரும் சூழ்நிலையில் சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாக்குளம் ஊருக்குள் மழைவெள்ளம் புகுந்ததையடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்களை மீட்டு தங்குமிடமும், உணவும் ஏற்பாடு செய்த சேரகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லி அரசன் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து டிப்பர் லாரியை கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கிழக்கு கடற்கரை சாலை நெடுஞ்சாலை ரோந்து பணியிலிருந்து வைப்பார் பேருந்து நிறுத்தம் முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டு தூத்துக்குடி நோக்கி வந்த மேற்படி கடத்தப்பட்ட லாரியை கைப்பற்றிய குளத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலைய காவலர் கதிர்வேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப, தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.