தூத்துக்குடி – நவ -20,2021
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் இந்திரா சர்க்கரை நோய் மையம் இணைந்து நடத்தும் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்டம் காவல்துறையினருக்கு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து சர்க்கரை நோய் மற்றும் இரத்தஅழுத்தம் உட்பட பல்வேறு சிகிச்சைக்கான இலவச பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ சிகிச்சை முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகiயில், நமது உடல் நலம் மிக முக்கியமானது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். நல்ல பழவழக்கங்களை பின்பற்றி நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் நலமாக இருந்தால் தான் நாம் திறம்பட பணி செய்ய முடியும். தற்போது சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வயதானவர்கள் மட்டுமில்லாமல் இளைஞர்களுக்கும் வரக்கூடிய சூழல் உள்ளது. இதற்கு நமது கட்டுபாடற்ற உணவு பழக்கங்களும் ஒரு காரணமாக உள்ளது. அவ்வப்போது நாம் உடல் நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, அதில் குறைபாடுகள் இருந்தால், உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல் நலத்தை பேணி காக்க வேண்டும். சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த நாம் உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையினர் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே இப்படிப்பட்ட மருத்துவ முகாம்கள் காவல்துறை சார்பாக ஏற்ப்படுத்தப்ட்டு வருகிறது. ஆகவே இந்த மருத்துவ முகாமை காவல்துறையினர் அனைவரும் பயன்படுத்தி பயனடையுமாறு கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தனது உரையை நிறைவு செய்தார்.
பின்னர் சர்க்கரை நோய் குறித்து இந்திரா சர்க்கரை நோய் மைய மருத்துவர் அருள்பிரகாஷ் காவல்துறையினர் அனைவருக்கும் மின் திரையில் திரையிடப்பட்ட படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆயுதப்படை காவல் கண்காணிப்பாளர் கண்ணபிரான் தலைமையிலான ஆயுதப்படையினர் மற்றும் இந்திரா சரக்கரை நோய் மைய உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இந்த முகாமில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, சைபர் குற்ற பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சுமார் 100 பேர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.