தூத்துக்குடி – நவ -19,2021
தூத்துக்குடியில் சைல்டு லைன்-1098 சார்பாக முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு பகுதியில் குழந்தைகள் தின விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சைல்டு லைன் – 1098 தூத்துக்குடி சார்பாக இன்று குழந்தைகள் தின விழா தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் சமுதாயத்தில் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதை தடுக்கும் பொருட்டு அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கென சட்டத்தில் போக்சோ சட்டம் போன்று தனியாக சட்டப்பிரிவுகள் உள்ளது. இந்த சட்டங்களில் மரண தண்டனை வரை பெற்று கொடுக்க வழிவகை உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது, குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றிற்காகவும் இந்த கடத்தல்கள் நடை பெறுகிறது. இந்த கடத்தல்கள் தடுக்கப்பட வேண்டும், இந்த குற்றங்கள் குறித்து நம்மிடம் கண்டிப்பாக விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே நாம் இந்த குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்க முடியும். மேலும் குழந்தைகளை பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்வி முக்கியமானதாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான எந்த குற்றங்கள் நடைபெற்றாலும் காவல்துறை சார்பாக உடனடியாக விசாரித்து வழக்கு பதிவு செய்து சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கெதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து எந்தவித தயக்கமும் இன்றி காவல்துறைக்கோ, சைல்டு லைன் எண்ணிற்கோ அழைத்து புகார் அளிக்கலாம்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான எந்த குற்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் உடனடியாக சைல்டு லைன் 1098, மகளிர் உதவி எண் (Women Helpline) 1091 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதே போன்று நகர்ப்புறம் போன்றே கிராம புறங்களிலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும், இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும், உங்கள் சுயவிவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைல்டு லைன் -1098 தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் தலைமையிலான உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசீலன், உதவி ஆய்வாளர் முத்துமாலை, உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, தூத்துக்குடி சைல்டு லைன்-1098 குழு உறுப்பினர்கள் கவிதா பேபி, . அனிதா, முத்தையாபுரம் பஞ்சாயத்து தலைவர் திரு. கோபிநாத் நிர்மல், காமராஜ் கல்லூரி குற்றவியல் துறை உதவி பேராசிரியர் ஜான் மோசஸ் கிரிதரன், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.