தூத்துக்குடி – அக் -11,2021
கொப்பம்பட்டி கசவன்குன்று பகுதியில் கொப்பம்பட்டி காவல் நிலையம் மற்றும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்தும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சி.சி.டி.வி கேமரா திறப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி உட்கோட்டம் கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கசவன்குன்று சமுதாய நலக்கூடத்தில் இன்று கொப்பம்பட்டி காவல் நிலையம் மற்றும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் இணைந்து கசவன்குன்று பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள், கண்பார்வையற்றோர் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு தையல் மிஷின், பார்வையற்றோருக்கு உதவும் ஊன்றுகோல் (Blind Walking Stick) மற்றும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள், நோட்புத்தகங்கள், எழுதுபொருள்கள் ஆகியவைகள் வழங்கும் விழா மற்றும் சி.சிடி.வி கேமரா திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கசவன்குன்று சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 5 சிசிடிவி கேமராக்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த சி.சி.டி.வி கேமராக்கள் அப்பகுதியில் உள்ள R.C நடுநிலை பள்ளியிலுள்ள மின்திரை மூலம் கண்காணிக்கப்படும்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், மாணவ மாணவியர்களாகிய உங்களுக்கு கல்வி ஒன்று தான் வருங்காத்தில் உங்களை உயர்த்த கூடிய கருவி ஆகும். உலகத்திலேயே அழியாத செல்வம் கல்வி செல்வம் ஒன்றுதான். இந்த செல்வத்தை இந்த மாணவ பருவத்திலேயே நீங்கள் பெற்று கொள்ள வேண்டும். முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் நீங்கள் வருங்காலத்தில் மிகச்சிறந்த சாதனையாளர்களாக ஆகலாம். தற்போது குழந்தைகளிலிருந்து இளைஞர்கள் வரை செல்போன் அதிகமாக உபயோகபடுத்துகிறார்கள். செல்போன்களை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். செல்போனை உபயோகப்படுத்தும்போது நமக்கே தெரியாமல் குற்றங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. ஆகவே செல்போன் பயன்படுத்தும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். மாணவ மாணவியர்களாகிய நீங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சொல் பேச்சு கேட்டு நடந்தால் சிறந்த வெற்றியாளர்களாக வர முடியும் என்றும்,
அதேபோன்று சி.சி.டி.வி கேமரா காலத்தின் கட்டாயமாக உள்ளது. சி.சி.டி.வி கேமரா பொருத்துவதன் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளது. சி.சி.டி.வி கேமரா குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், குற்றங்கள் நடவாமல் இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. இந்த சி.சி.டி.வி கேமரா பொருத்தியதால் உங்கள் கிராமம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
பின்னர் பெண்கள் 8 பேருக்கு தையல் மிஷின்கள், முதியோர்கள் 10 பேருக்கு நடப்பதற்கு பயன்படுத்தும் வாக்கர், பார்வையற்றோர் 3 பேருக்கு பார்வையற்றோருக்கு உதவும் ஊன்றுகோல் (Blind Walking Stick) மற்றும் அரிசிப்பை, மாணவ மாணவியர்கள் 25 பேருக்கு பள்ளி சீருடைகள், 60 மாணவ மாணவியர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஆகியவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க தேசிய செயலாளர் திரு. ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் திரு. சின்னசாமி மற்றும் கலை இலக்கிய அணி செயலாளர் பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல், கோவில்பட்டி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன், கொப்பம்பட்டி காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் . ராஜ்குமார், சு.ஊ நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் வரபிரசாதம், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், விவசாய அணி மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் மாணவ மாணவியர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.