சென்னை – அக் -12,2021
சேத்துப்பட்டு பகுதியில் முதியவரை கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்களை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் வசிக்கும் மூசா, (வ/73), என்ற முதியவரை கடந்த 03.10.2021 அன்று, அங்கு வந்த சிலர் காரில் கடத்திச்சென்றுள்ளனர். மேலும் கடத்தல்காரர்கள் மூசாவின் மகன் ஷெரீப் என்பவரை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து மூசாவின் மகன், கானத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
கடத்தப்பட்ட முதியவரை மீட்க, நீலாங்கரை உதவி ஆணையாளர் சுதர்சன் தலைமையில், சேத்துப்பட்டு காவல் நிலைய தலைமைக் காவலர்கள் சரவணகுமார் ராஜேஷ் மற்றும் முதல்நிலைக் காவலர் மகேஷ்வரன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர், மேற்படி வழக்கில் விசாரணை மேற்கொண்டதில், மூசாவிடம் வேலை செய்த குமார் (எ) அறுப்பு குமார் என்பவர், மேற்படி மூசாவிடம் அதிக பணம் இருப்பதை தெரிந்துக்கொண்டு, அவரை கடத்திச் சென்று, அவரது மகனிடம் பணம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
அதன்படி மேற்படி காவல் குழுவினர் மூசா குறித்து தேடுதலில் ஈடுபட்டு காரில் கடத்தப்பட்ட அவரைப் பத்திரமாக மீட்டு, அவரை கடத்திச் சென்ற குற்றவாளிகள் 1.குமார் (எ) அறுப்பு குமார், வ/44, திருவாரூர் மாவட்டம், 2.பிரகாஷ், வ/33, மயிலாடுதுறை மாவட்டம், 3.சங்கீதா, வ/28, மாதவரம் ஆகிய மூவரை எழும்பூரில் வைத்து கைது செய்தனர்.
மேற்படி குற்றவாளிகளிடமிருந்து பணம் ரூ.25,000/-, 10 கிராம் எடை கொண்ட 3 தங்க மோதிரங்கள், 3 செல்போன்கள், 2 கைக்கடிகாரங்கள், 1 டம்மி துப்பாக்கி, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.