தூத்துக்குடி – அக் – 13,2021
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த பச்சைக்கிளி என்பவரது மனைவி முத்துலெட்சுமி (40) என்பவர் நேற்று (12.10.2021) அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துலெட்சுமி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துராமன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துராஜா, பொன்முனியசாமி, காவலர்கள் கொடிவேல், பிரபாகரன், விடுதலை பாரதிக்கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வடக்கு ஆவாரங்காடு நடுத்தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராமர் (50) என்பதும், பொதுப்பாதை சம்மந்தமாக ஏற்பட்ட நிலப்பிரச்சனையில் முத்துலெட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது, இதனையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தப்பியோடிய ராமரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
மேற்படி எதிரியை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.