சென்னை – அக் -08,2021
கொடுங்கையூர் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் நபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற சக்திவேல் என்பவரை கைது செய்த கொடுங்கையூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சிவபிரகாசம் (வ/20), என்பவர், கொடுங்கையூரிலுள்ள ஒரு உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை எடுத்துக் கொண்டு, சிவபிரகாசம் 19.09.2021 அன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் எம்.கே.பி.நகர், ஜெ.ஜெ.நகர் 7வது தெருவில் சென்று கொண்டிருந்தபோது, 2 நபர்கள், அவரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தி, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது இருசக்கர வாகனம், 1 செல்போன் மற்றும் பணம் ரூ.200/- ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேற்படி சம்பவம் குறித்து சிவபிரகாசம், எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உடனே, இரவு ரோந்து பணியிலிருந்த கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கன்னியப்பன், முதல்நிலைக் காவலர்கள் சலீம் ஆடலரசு மற்றும் காவலர் .குணசீலன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து, மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளில் சக்திவேல் (வ/19), வியாசர்பாடி என்பவரை சில மணி நேரங்களில் கைது செய்தனர். மேற்படி எதிரியிடமிருந்து இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த கொடுங்கையூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.