சென்னை – அக் -08,2021
அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை,அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெரிய அளவிலான கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் முன்பு நிறுத்தியிருந்த கார்களின் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த செல்போன், லேப்டாப் மற்றும் பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் திருடு போனதாக எ அண்ணாநகர் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் மற்றும் திருமங்கலம் காவல் நிலையத்தில் 1 வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய அண்ணாநகர் உதவி ஆணையாளர் அகஸ்டின் பால்சுதாகர் தலைமையில்,அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், பன்னீர்செல்வம், தலைமைக் காவலர்கள் ஜெயமணி சரவணன் குமரன் மற்றும் காவலர் முகமது சலாவுதீன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, சம்பவ இடங்களின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜிநகரைச் சேர்ந்த 1) டீனு அகமது (வ/25), 2) தீனதயாளன் (வ/22), 3) ரோகன்தேவ் (வ/24), 4) ராஜாராம் (வ/29), 5) கிரண்குமார் (வ/24), 6) தினேஷ்குமார் (வ/25), 7) சுப்ரமணி (வ/48) ஆகிய 7 நபர்களை கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய 17 வயது இளஞ்சிறாரை பிடித்தனர். அவர்களிடமிருந்து 3 லேப்டாப்கள் மற்றும் பணம் ரூ.1,16,000/- கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த அண்ணாநகர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.