சென்னை – செப்-07,2021
ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம், நடிகர் ஆர்யா போல நடித்து மோசடி செய்த 2 நபர்களை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் .
ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் அளித்த மோசடி புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சென்னை, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் என்பவர் சமூக வலைதளத்தில் நடிகர் ஆர்யாவாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த பெண்ணிடம் பேசி வந்ததும், மேலும், திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பறித்ததும், மேற்படி குற்றச் செயலுக்கு முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் தேன்மொழி, இ.கா.ப., அறிவுரையின்பேரில் துணை ஆணையாளர் நாகஜோதி நேரடி மேற்பார்வையில், சைபர்கிரைம் பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் ஷாஜிதா மேற்பார்வையில், சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையாளர் .ராகவேந்திரா, கே.ரவி தலைமையில், காவல் ஆய்வாளர் சுந்தர், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் முதல்நிலைக் காவலர் பாஸ்கர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மேற்படி மோசடியில் ஈடுபட்ட முகமது அர்மான் மற்றும் முகமது ஹுசைனி பையாக் ஆகியோரை 24.8.2021 அன்று கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.