சென்னை – செப்-07,2021
திருமண வலைதளத்தில் நெதர்லாந்து மருத்துவர் என போலியான விவரங்கள் பதிவு செய்து, சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் சிறிது சிறிதாக பணம் பெற்று மிரட்டிய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 2 நபர்களை டெல்லியில் கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் .
சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இணையதளத்தில் உள்ள ஒரு திருமண வலைதளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்திருந்ததாகவும், அதே திருமண வலைதளத்தில் பதிவு செய்துள்ள டாக்டர் முகமது சலீம் என்பவர் நெதர்லாந்து நாட்டில் மருத்துவராக உள்ளதாகவும், தன்னை தொடர்பு கொண்டு, ஆசை வார்த்தைகள் கூறி, சிறிது சிறிதாக என சுமார் ரூ.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்து ஏமாற்றியதாகவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்தார். இப்புகார் மீது நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டதின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் தேன்மொழி, இ.கா.ப., அறிவுரையின்பேரில், துணை ஆணையாளர் நாகஜோதி ஆலோசனையின்பேரில், சைபர் குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் வேல்முருகன் தலைமையில், காவல் ஆய்வாளர் வினோத்குமார், தலைமைக் காவலர் ஜெகநாதன், முதல்நிலைக் காவலர்கள் பாஸ்கர், விஜயகண்ணன் மற்றும் காவலர் நித்யானந்தம் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 1) பாலினஸ் சிகேலுவோ (வ/31) மற்றும் 2) சிலிட்டஸ் இகேசுக்வு (வ/23) ஆகியோரை 31.8.2021 அன்று டெல்லியில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ4,30,000/- செல்போன்கள், லேப்டாப், வங்கி கணக்கு அட்டைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.