தூத்துக்குடி – செப்- 07,2021
தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் இணையதளத்தின் (CCTNS) மூலம் மேற்கொள்ளும் பணிகள் குறித்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் கணினி கையாளும் காவல் ஆளினர்களுக்கான அறிவுரைக்கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தமிழக காவல்துறையில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் இணையதளம(CCTNS) மூலம் அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் மனு விசாரணை, வழக்குகள் பதிவு செய்வது முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவது வரையிலும், அதன் பின் நடைபெறும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த வழக்கு நாட்குறிப்புகளை பதிவு செய்தல், காணாமல் போன நபர்கள், திருட்டு வாகனங்கள், குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்தல், வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள், சாட்சிகள் மற்றும் வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும் அழைப்பாணைகளை (CCTNS) மின் அழைப்பாணை (e – Summons)யின் மூலம் சம்மந்தப்பட்டவர்களின் செல்போன்களுக்கே செய்தியாக அழைப்பாணை அனுப்புதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்தும், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் கணினி கையாளும் போலீசார் ஆகியோருக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள அனைத்து வேலைகளையும் மேற்படி இணைய தளத்தில் எவ்வித கால தாமதமில்லாமல் உடனுக்குடன் பதிவேற்றம் செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் துணை கண்காணிப்பாளர் பிரேமானந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, கணினி பிரிவு உதவி ஆய்வாளர் . விக்டோரியா உட்பட காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.