தூத்துக்குடி – செப் – 07,2021
கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து மனிதநேயத்துடன் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவருக்கு சால்வை அணிவித்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அத்திமரப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி சரசு என்பவர் கடந்த 30.08.2021 அன்று எட்டையாபுரம் சென்றுவிட்டு திரும்பி வரும்போது தூத்துக்குடி பழைய பேரூந்து நிலையத்தில் வைத்து தனது மணிப்பர்ஸை தவறவிட்டுள்ளார். அதில் ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், இரு சக்கர வாகனத்தின் ஆர்.சி. புக் ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் பணம் ரூபாய் 9,500/-மும் வைத்திருந்துள்ளார். அப்போது பழைய பேரூந்து நிலையம் வந்த தூத்துக்குடி அழகேசபுரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செய்யது அலி மகன் சொய்பு (35) என்பவர் மேற்படி மணிப்பர்ஸ் கீழே கிடப்பதை பார்த்து, அதை எடுத்து மனித நேயத்துடன் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் அறிவுரையின்படி உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் தனிப்பிரிவு தலைமைக் காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் அதில் உள்ள ஆவணங்களை வைத்து, அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அதன் உரிமையாளரான சரசு என்பவரிடம் ஒப்படைத்தார்.
மேற்படி மணிப்பர்ஸை தவறவிட்டுள்ளவர் மறுபடியும் இந்த ஆவணங்களை சேகரிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மனித நேயத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேற்படி சொய்பு என்பவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சொய்பு நேரில் அழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.