சென்னை – செப் – 04,2021
எண்ணூர் பகுதியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.90 ஆயிரம் அடங்கிய தலையணை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த எண்ணூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, மணிலிபுதுநகர் பகுதியில் டெல்லியைச் சேர்ந்த முகமது வசீம் (எ) பப்பு (வ/35), என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த அவரது அம்மா சந்தாபீ (பெ/55) என்பவரை வழியனுப்பி வைப்பதற்காக கடந்த 30.08.2021 அன்று மாலை முகமது வசீம் (எ) பப்பு தனது மனைவி மற்றும் தாய் சாந்தபீயுடன் ஒரு ஆட்டோவில் ஏறி விம்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளனர். பிறகு அங்கிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு செல்லும் ரயிலில் தனது தாய் சந்தாபீ (55) என்பவரை ஏற்றி விட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சாந்தாபீ இரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் ரூ.90 ஆயிரம் பணத்துடன் அடங்கிய தலையணையை தேடியுள்ளார். பணத்துடன் கூடிய தலையணை ஆட்டோவில் தவறவிட்டதை அறிந்த சாந்தபீ உடனே அவரது மகன் முகமது வசீம் (எ) பப்புவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
முகமது வசீம் (எ) பப்பு மேற்படி சம்பவம் குறித்து எண்ணூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து எண்ணூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜி, முதல் நிலைக்காவலர் வேலுசாமி, மற்றும் இரண்டாம் நிலைக்காவலர் தாமோதரன் ஆகிய மூவரும் மணலிபுதுநகர் ஆண்டாள் குப்பம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை செய்த போது, ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவிலிருந்து தலையணையை யார் வைத்தது என்பது தெரியாமல் ஆண்டாள் குப்பம் பகுதியில் உள்ள குப்பையில் வீசி சென்றதாக தெரிவித்துள்ளார். உடனே மேற்படி போலீசார் ஆட்டோ ஓட்டுநர் கூறிய இடத்தில் தேடி ரூ.90 ஆயிரம் அடங்கிய தலையணையை கண்டுபிடித்து சாந்தபீயின் மகன் முகமது வசீம் (எ) பப்புவிடம் பத்திரமாக ஓப்படைத்தனர்.
பயணி ஆட்டோவில் தவறவிட்ட ரூ.90 ஆயிரம் அடங்கிய தலையணையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த எண்ணூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்