சென்னை – செப்-08,2021
பூக்கடை பகுதியில் முதியவரிடம் செல்போன் பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற குற்றவாளியை, துரத்திச்சென்று பிடித்து ஆயுதப்படை பெண் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை, பார்க்டவுனைச் சேர்ந்த முதியவர் தாமோதரன்,(வ/70), என்பவர் 05.09.2021 அன்று இரவு சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் மேற்படி முதியவர் தாமோதரனிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். முதியவர் கூச்சலிட, இதனை பேருந்திலிருந்து கவனித்த ஆயுதப்படை பெண் காவலர் இந்திராணி, விரைந்து செயல்பட்டு பேருந்திலிருந்து இறங்கி மேற்படி வாலிபரை துரத்திச்சென்று அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப்பிடித்து கைது செய்து பூக்கடை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர் பாலாஜி, வ/28, வியாசர்பாடி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 1 செல்போன் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சம்பவத்தில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளியை கைது செய்த ஆயுதப்படை பெண் காவலரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.