சென்னை – செப்-17,2021
கீழ்பாக்கம் பகுதியில் நீட் தேர்வு மையத்திற்கு பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்காமல் வந்த மாணவிக்கு தக்க சமயத்தில் அருகில் உள்ள ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்று புகைப்படம் எடுத்து உதவி செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோநாதன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கீழ்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோநாதன் என்பவர் கடந்த 12.09.2021 அன்று கீழ்பாக்கம் பகுதியில் உள்ள கோல சரஸ்வதி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போது, அங்கு வந்த மாணவி ஒருவர் மிகவும் பதட்டத்துடன் இருந்துள்ளார். இதனை கவனித்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோநாதன் மேற்படி மாணவியிடம் சென்று விசாரணை செய்த போது, மாணவி தேர்வு மையத்திற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்து வரவில்லை என்று கூறியுள்ளார். உடனே சிறப்பு உதவி ஆய்வாளர் சிறிதும் தாமதிக்காமல் மாணவியை அருகிலுள்ள ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்து, மாணவியை மீண்டும் தேர்வு மையத்திற்கு தக்க சமயத்தில் அழைத்து வந்த உதவி புரிந்துள்ளார். இதனால் மாணவி சரியான நேரத்தில் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதியுள்ளார். தக்க சமயத்தில் உதவி செய்த சிறப்பு உதவி ஆய்வாளரை, தேர்வு மையத்தில் கூடியிருந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
சிறப்பாக பணிபுரிந்து, மாணவிக்கு தக்க சமயத்தில் உதவிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான்பிரிட்டோ நாதன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.