தூத்துக்குடி – செப் – 08,2021
ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல்துறை சார்பாக சாயர்புரம் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலந்தாய்வு கூடம், இருசக்கர வாகன நிறுத்துமிடம் மற்றும் காவலர் உடற்பயிற்சிகூடம் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
சாயர்புரம் காவல் நிலையத்தில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல்துறை சார்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அமர்வதற்காக ஒரு அறையும், கலந்தாய்வு கூடம் (Meeting Hall), இருசக்கர வாகன நிறுத்துமிடம் (Two Wheeler Parking Area), காவல் நிலையத்தில் வரும் பொதுமக்களுக்காக குடிநீர் சுத்திகரிப்பான் (Water Purifier) மற்றும் காவலர் உடற்பயிற்சி கூடம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை இன்று (08.09.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நான் சாயர்புரம் காவல் நிலைய போலீசாரிடம் காவல் நிலையத்தை சிறந்த முறையில் பராமரிக்குமாறு கூறினேன். அதை முன்னிட்டு மேற்படி வசதிகளை புதிதாக ஏற்படுத்தி காவல் நிலையத்தை சீர்செய்து மிகச் சிறப்பாக அமைத்ததற்கு காவல்நிலைய போலீசாரை வாழ்த்துகிறேன். மேலும் மேற்படி வசதிகள் புகார் அளிக்க வரும் பொதுமக்களாகிய உங்களுக்கும் பயன்படும் வகையில் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே காவல்துறை இருக்கிறது, மேலும் புகார் அளிக்கவரும் பொதுமக்களை இன்முகத்துடன் அனுகி அவர்களின் புகார்களை நியாயமான முறையில் நிவர்த்தி செய்ய வேண்டும், அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முடிந்தவரை சிசிடிவி கேராக்களை பொருத்துங்கள், அதன்மூலம் உங்கள் பகுதிகளில் குற்ற நிகழ்வுகள் குறையும் மேலும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
இந்நிகழ்வின்போது ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, பேய்குளம் விவசாய சங்க தலைவர் குணசேகரன், உறுப்பினர் சுதாகர், நட்டாத்தி துணை பஞ்சாயத்து தலைவர் பண்டாரம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.