சென்னை – செப்-07,2021
மந்தைவெளியைச் சேர்ந்த மூதாட்டியிடம் இறந்து போன கணவரின் இன்சூரன்ஸ் பணத்தை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.2.06 கோடி பணம் பெற்று மோசடி செய்த டெல்லியைச் 10 நபர்களை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்த சுதாஶ்ரீதரன் (பெ/67) என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், இவரது கணவர் இறந்துவிட்டதால், அவரது இன்சூரன்ஸ் தொகையை பெற முன்தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி, சிறிது சிறிதாக என ரூ.2.06 கோடி பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து சுதாஶ்ரீதரன், சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் தேன்மொழி, இ.கா.ப., அறிவுரையின்பேரில், துணை ஆணையாளர் நாகஜோதி ஆலோசனையின்பேரில், கூடுதல் துணை ஆணையாளர் பாண்டியன் நேரடி கண்காணிப்பில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் பிரபாகரன் தலைமையில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு ஆய்வாளர்கள் புஷ்பராஜ் மற்றும் முருகேசன், உதவி ஆய்வாளர் .பிரேம்குமார், தலைமைக் காவலர்கள் .ஸ்டாலின், சுருளிநதி, .நிஷா, வளர்மதி, காவலர்கள் மோகன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் குழுவினர், விசாரணை மேற்கொண்டு, டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த அமன்பிரசாத் உட்பட 6 குற்ற எதிரிகளை 31.3.2021 அன்று டெல்லியில் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். மேலும், காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த மேற்படி கும்பலைச் சேர்ந்த 7.சிம்ரான்ஜித் சர்மா (பெ/29) டெல்லி 8) அன்ஷிகா (எ) சிவானி சவுஹான் (எ) பிரியா சர்மா 9) அமித்குமார், 10) அக்ஷத்குப்தா ஆகியோரை டெல்லியில் கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.