சென்னை – செப் – 02,2021
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ மாணவிகளுக்கு டேப்லட் , கணிப்பொறி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
சென்னை பெருநகரில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இளஞ்சிறார், சிறுமியர் தொடர்ந்து கல்வி பயிலவும், திறமையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு பயிற்சி மற்றும் ஊக்கமளித்து, கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து திகழவும், சமூக சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் தகுந்த வழிகாட்டுதலோடு சிறந்து விளங்கவும் 2003ம் ஆண்டு சென்னை பெருநகரில் உள்ள காவல் நிலைய எல்லைகளில் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் (Police Boys & Girls club) துவக்கப்பட்டன.
சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் வழிகாட்டுதலின்பேரில், இக்காவல் சிறார் மன்றங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் பராமரிப்பில், சாரண ஆசிரியர் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் கல்வி, விளையாட்டு, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டும், அவர்களுக்கு தேவையான கல்வி தொடர்பான புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பயிற்சிகளுக்கான உடைகள், உபகரணங்களும் வழங்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்சி அளித்து, சிறார் மன்ற மாணவ, மாணவிகள் கல்வியிலும், விளையாட்டுகளிலும் நன்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். சென்னை பெருநகரில் உள்ள 10 சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு 100 டேப்லட், 20 கணிப்பொறி மற்றும் 650 கல்வி உபகரணங்களை (Educational Kit) HCL Foundation நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் Hope Foundation நிர்வாகத்தினர் வழங்க முன்வந்தனர்.
மாலை 6.00 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் இரண்டாவது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப கலந்து கொண்டு காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ மாணவிகளுக்கு டேப்லட், கணிப்பொறி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் செந்தில்குமார், இ.கா.ப, (வடக்கு) மருத்துவர் N.கண்ணன், இ.கா.ப, ( தெற்கு) , காவல் அதிகாரிகள், HCL Foundation இயக்குநர் நிதிபுன்டிர், Hope Foundation நிர்வாகி மலர்விழி பிரபாத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.