தூத்துக்குடி – ஆகஸ்ட் -11,2021
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு காரில் திருச்செந்தூர் சென்றவர்களை முன்விரோதம் காரணமாக வழிமறித்து தாக்கி, வந்த காரை பறித்துச்சென்ற 3 பேர் கைது – 2 கார்கள் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
கடந்த 20.11.2019 அன்று சிவகங்கை மாவட்டம், மேலவாணியன்குடியைச் சேர்ந்த வேட்டையார் மகன் கருணாநிதி (50) என்பவர், அவரது நண்பர் கோதண்டபாணி என்பவருக்கு சொந்தமான ஸ்கார்பியோ காரை இரவல் வாங்கிக் கொண்டு நண்பர்களுடன் திருச்செந்தூர் சென்றுவிட்டு திரும்பி வரும்போது குளத்தூர் அருகில் உள்ள வைப்பார் பாலத்தில் வைத்து சாயல்குடி கடலாடியைச் சேர்ந்தவர்களான வீரபுத்திரன் மகன் மூக்கையா (60), அவரது மகன்கள் ஜெயபுத்திரன் (32), ஜெயக்குமார் (30), ஜெயச்சந்திரன் (28), சீனிமுகமது மகன் லத்தீப் (30), முருகேசன் மகன் செந்தூர் என்ற திராவிடமணி (36) மற்றும் இருவர் இன்னோவா காரில் வந்து கருணாநிதி காரை வழிமறித்து காரிலிருந்தவர்களை தாக்கி, காரை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கருணாநிதி கடந்த 04.03.2020 அன்று குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலைய தலைமைக் காவலர் மாரிச்சாமி, குளத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் ராசையா, செல்வக்குமார், விளாத்திகுளம் காவல் நிலைய காவலர்கள் குருசாமி, ராஜேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரிகளை கைது செய்து, பறித்துச் சென்ற காரை மீட்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டும், செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்து எதிரிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று தனிப்படை போலீசார் ரோந்து சென்ற போது குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞானபுரம் அருகே ஏற்கனவே தேடி வந்த எதிரிகளின் இன்னோவா கார் வருவதையறிந்த போலீசார் மேற்படி காரை மடக்கிப்பிடித்தனர். அந்தக் காரில் ஸ்கார்பியோ காரை கடத்திச் சென்ற எதிரிகளான சாயல்குடி கடலாடியைச் சேர்ந்த 1) மூக்கையா மகன் ஜெயக்குமார் (30), அதே பகுதியைச் சேர்ந்த 2) சீனிமுகமது மகன் லத்தீப் மற்றும் 3) முருகேசன் மகன் செந்தூர் என்ற திராவிடமணி (36) ஆகியோர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சிவகங்கையைச் சேர்ந்த கடத்தப்பட்ட ஸ்கார்பியோ காரின் உரிமையாளரான கோதண்டபாணி என்பவருக்கும் மேற்படி மூக்கையா குடும்பத்தாருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளதும், அதன் காரணமாக மேற்படி ஸ்கார்பியோ காரில் வந்தவர்களை தாக்கி அந்தக் காரை பறித்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் தருவைக்குளத்தைச் சேர்ந்த மற்ற 2 எதிரிகளின் வீட்டில் ஸ்கார்பியோ காரை மறைத்து வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தருவைக்குளம் சென்று அங்கு மறைத்து வைத்திருந்த ஸ்கார்பியோ காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் எதிரிகள் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இன்னோவா காரையும் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கின் மற்ற எதிரிகளான சாயல்குடி கடலாடியைச் சேர்ந்தவர்களான வீரபுத்திரன் மகன் மூக்கையா (60), அவரது மகன்கள் ஜெயபுத்திரன் (32), ஜெயச்சந்திரன் (28) ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இது தவிர தலைமறைவாக உள்ள மற்ற 2 எதிரிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேற்படி சாயல்குடியைச் சேர்ந்த எதிரிகள் 3 பேரைக் கைது செய்து, 2 கார்களையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.