தூத்துக்குடி – ஆகஸ்ட் -29,2021
தூத்துக்குடியில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை மற்றும் ஆன்ட் கிரியேட்டிவ் கேரியர் அகாடமி சார்பாக சாலை பாதுகாப்பு குறித்து ஆன்லைனில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல்துறை மற்றும் ஆன்ட் கிரியேட்டிவ் கேரியர் அகாடமி சார்பாக 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலைபாதுகாப்பு குறித்த வினாடிவினா, ஓவிய போட்டிகள் ஆன்லைனில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா இன்று டூவிபுரம் பகுதியில் உள்ள ஆன்ட் கிரியேட்டிவ் அகாடமியில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு குறித்த “விழித்துக்கொள்” என்ற குறும்படத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெளியிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று சாலை பாதுகாப்பு குறித்த போட்டிகள் மாணவ மாணவிகளிடையே நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கும் விழாவாக நடைபெற்று வருகிறது. சாலைபாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது குறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடைபெற்றது. தற்போது நாட்டில் விபத்தில் இறப்பவர்களே அதிகம். சாலை விபத்தில் உயிரிழப்பவரால் அவரது குடும்பமே பாதிக்கப்படுகிறது. அதனால் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். தலைகவசம் அணிவதால் விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும். அதே போன்று நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது சீட்பெல்ட் கட்டாயம் அணியவேண்டும். இப்போது வாகன எண்ணிக்கை அதிகமாவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிறது, இதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் அதிகமாகியுள்ளது. விபத்துக்களை தவிர்ப்பதற்கும், விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்கும் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்கவேண்டும்.
கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்ட் கிரியேட்டிவ் கேரியர் அகாடமியின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் மற்றும் அகாடமியின் ஊழியர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், வடபாகம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் முருகன், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், மத்தியபாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் குறும்பட இயக்குநர் சாம்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.