தூத்துக்குடி – ஆகஸ்ட் – 31,2021
புதுக்கோட்டை சுற்றியுள்ள பல பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் உட்பட இருவர் கைது – ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க நகை மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
கடந்த சில மாதங்களில் சிப்காட், தட்டப்பாறை மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியாக காட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், கடை வீதிகளுக்கு செல்லும் பெண்கள் என தனியாக நடந்து செல்லும் 7 பெண்களிடம் 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்து, அவர்கள் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துச் சென்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தட்டப்பாறை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு மற்றும் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 5 வழக்குகளும் மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை தேடி வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் பாண்டியன், தலைமைக் காவலர்கள் சிவசக்திவேல்,மாணிக்கம், கார்த்திகேயன், கிருஷ்ணன் மற்றும் காவலர் ஜெயபால்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து விரைந்து கைது செய்து திருடிய நகைகளை மீட்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டதில் புதுக்கோட்டை நடுக்கூட்டுடன் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் பாரதி செல்வம் (20) மற்றும் நடுக்கூட்டுடன்காடு லெட்சுமண பெருமாள் மகன் நாகராஜ் (23) ஆகிய இருவரும் வேலைக்கு செல்லாமல் கையில் நிறைய பணம் வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து, உல்லாசமாக சுற்றிக்கொண்டு திரிந்தது தெரியவந்தது. அதனால் இவர்கள் மீது சந்தேகமடைந்த தனிப்படையினர் மேற்படி இருவரையும் பிடிப்பதற்கு தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டு நேற்று புதுக்கோட்டை பழைய பாலம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மேற்படி இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேலே குறிப்பிட்டுள்ள 7 பெண்களிடம் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 ½ பவுன் எடையுள்ள தங்கச் செயின்களை பறித்து சென்றதையும், மேலும் முத்தையாபுரம் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2 இரு சக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் மேற்படி இருவரையும் கைது செய்து, அவர்கள் திருடிய 20 ½ பவுன் தங்கச் செயின்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேற்படி எதிரிகளில் ஒருவரான பாரதி செல்வம் என்பவர் 2018ம் ஆண்டு புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிப்படை போலீசார் இதுபோன்று வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கொள்ளையன் பாரதி செல்வம் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 ½ பவுன் தங்கச் செயின்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தனிப்படைப் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.