சென்னை – ஆகஸ்ட் – 04,2021
மயிலாப்பூர் பகுதியில் 2 கொலைக் குற்றவாளிகளை துரத்திச்சென்று பிடித்த காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சரவணன், (வ/25), என்பவர் 01.8.2021 அன்று லஸ், கெனால் பேங்க் ரோடு , மின்வாரிய அலுவலகம் எதிரே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 4 நபர்கள் சரவணனை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவயிடத்தின் அருகிலிருந்த மெரினா காவல் நிலைய தலைமைக்காவலர் விஸ்வநாதன், (த.கா.18506), J-2 அடையார் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் ரமேஷ்குமார் ஆகியோர் விரைந்து செயல்பட்டு இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று 1) மணிகண்டன் (வ/26), மயிலாப்பூர், 2) ஷாம் சிலம்பரசன் (வ/20), மயிலாப்பூர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குற்றவாளி மணிகண்டன் அளித்த தகவலின் பேரில் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3) அஜித்குமார் (வ/24), மயிலாப்பூர், 4) விஜய் (வ/26), மயிலாப்பூர் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கத்திகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சம்பவத்தில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.