தூத்துக்குடி – ஆகஸ்ட் – 03,2021
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி மநாகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ இ.ஆ.ப ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி ராஜ் மஹாலில் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் சிறப்பு நோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தி. சாருஸ்ரீ இ.ஆ.ப துவக்கி வைத்து கொரோனா பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார்
அப்போது மவாட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3ம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பக்கத்து மாநிலங்களில் கொரோனா 3ம் அலை பரவத் தொடங்கியுள்ளது, அதனால் நம் மாநிலத்திலும் பரவக்கூடும் என்பதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரைக்கும் பொதுமக்களிடையே கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவித்துள்ளது. அதன்படி 01.08.2021 அன்று மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி பழைய பேரூந்து நிலையத்தில் துண்டுபிரசுரம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டியும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோன்று நேற்றும் (02.08.2021) குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளை கிருமி நாசினி கொண்டு எவ்வாறு கைகழுவுவது என்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் இன்று 3வது நாளாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்கத்தினரை அழைத்து தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா பெருந்தொற்று தடுப்பு விழிப்புணர்வு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் மூலம் மாவட்டம் முழுவதும் இம்மாதிரியான மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் முக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.
பின்னர் அப்பகுதியிலுள்ள வேன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் 60 பேருக்கு அரிசிப்பை போன்ற கோரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். பின்பு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினார்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
இந்த முகாமில் மாநகராட்சி சார்பாக ஹலோபதி மருத்துவர் ஆர்த்தி, சித்த மருத்துவர் முத்துமாரி, தூத்துக்குடி மாவட்ட ஹோமியோபதி மருத்துவ சங்க தலைவர் . பாதுஷா, AVM மருத்துவமனை சார்பாக மருத்துவர் மைக்கேல், மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜலிங்கம், பழைய பேரூந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் சுப்பையா, மில்லர்புரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தசேகர் மற்றும் ஹோட்டல் சங்க தலைவர் பாலமுருகன், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.