சென்னை – ஆகஸ்ட் – 17,2021
ஆயிரம் விளக்கு பகுதியில் சோமாலிய நாட்டினரிடமிருந்து 3,800 டாலர்கள் பணத்தை பறித்துச் சென்ற ஈரானைச் சேர்ந்த 9 நபர்களை கைது செய்த, ஆயிரம் விளக்கு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சோமாலியா நாட்டைச் சேர்ந்த அலி அகமது முகமது (வ/61) என்பவர் கண் அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜியில் தங்கியிருந்தார். அலி அகமது முகமது, 13.7.2021 அன்று மாலை, ஆயிரம் விளக்கு மாடல் ஸ்கூல் ரோடு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, ஒரு கருப்பு நிற காரில் வந்த மூன்று நபர்கள், அலி அகமது முகமதுவிடம் தாங்கள் சென்ட்ரல் போலீஸ் என்றும், போதை பொருள் வைத்துள்ளீர்களா என சோதனையிட வேண்டும் என்று கூறி, அவருடைய பர்ஸை எடுத்து சோதனையிடுவதுபோல் நடித்து அதிலிருந்த 3,800 டாலர் பணத்தை எடுத்துக் கொண்டு மூவரும் காரில் தப்பித்து சென்றனர்.
மேற்படி சம்பவம் குறித்து, அலி அகமது முகமது, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உதவி ஆய்வாளர் மருது தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பிரகாசம், கிருஷ்ணகுமார், தலைமைக் காவலர், தேவராஜ் (த.கா.26634) மற்றும் முதல்நிலைக் காவலர் தங்கபாண்டியன் (மு.நி.கா.32215) ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, ஈரான் நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகள் 1)ஷியாவஸ் (வ/26) 2)பெகருஷா (வ/35) 3)சாபீத் (வ/35), 4)ரோஸ்டம்சைதி (வ/28), 5)பாத்திமா (பெ/39), 6)அப்சனா (பெ/35), 7)யூனஸ்அலிபனா (வ/56), 8)பென்யாமின் (வ/19), 9) நஷ்மின் (பெ/36) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்கள், வெளிநாட்டு பணம் டாலர்கள், கத்தி, போலி கார் நம்பர் பிளேட்டுகள், 15 செல்போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சம்பவத்தில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.