விருதுநகர் – ஆகஸ்ட் – 21,2021
விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கன் ஊரைச்சேர்ந்த பானுப்பிரியா விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். பானுப்பிரியாவுக்கும் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் விக்னேஷ்க்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். விருதுநகர் காவலர் குடியிருப்பில் இவர்கள் குடியிருந்து வந்தனர். விக்னேஷ்க்கு மதுரை அரசு பணிமனையில் வேலை என்பதால் அவர் தினமும் அங்கு சென்று விட்டு வருவது வழக்கம். இதனால் விக்னேஷ் மதுரைக்கு குடியேறி சென்றுவிடலாம் என்று பானு பிரியாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு பானு பிரியா மறுத்து வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விடுவதால் இரண்டு வயது மகனை கவனித்துக் கொள்வதற்காக பானுப்பிரியாவின் உறவினர் கலைச்செல்வி வீட்டில் தங்கியிருந்து உதவியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென்று பானுப்பிரியா போலீஸ் குடியிருப்பை காலி செய்துவிட்டு சாத்தூர் சாலையிலுள்ள வாடகை வீட்டிற்கு சென்றிருக்கிறார். அந்த வீட்டின் உரிமையாளர் கற்பகத்தின் கணவர் பாண்டி சூலக்கரை போலீசில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்த வீட்டிற்கு குடி ஏறியதில் விக்னேஷ்க்கு உடன்பாடில்லை. இதனால் கணவன் மனைவி இடையே தகராறு அதிகமாயிருக்கிறது. நேற்றைக்கு இரவு மீண்டும் பிரச்சினை வெடித்திருக்கிறது. பானுப்பிரியா விக்னேஷ் தகராறு செய்த போது கலைச்செல்வி குழந்தையை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். கணவன்-மனைவிக்கு இடையே பெரும் வாக்குவாதம் நீண்ட நேரம் நடந்து இருக்கிறது . இதன் பின்னர் விக்னேஷ் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருக்கிறார். பானுப்பிரியா வெளியே வராததால் நீண்ட நேரம் பொறுத்திருந்து பார்த்திருந்த கலைச்செல்வி பெட்ரூமுக்குள் சென்று பார்த்திருக்கிறார். அங்கே பானுப்பிரியா பிணமாகக் கடந்து இருக்கிறார்.
தகவலறிந்த சூலக்கரை போலீசார் பானுப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.