தூத்துக்குடி – ஆகஸ்ட் – 28,2021
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பகுதியில் விலையுயர்ந்த நாகமாணிக்க கல் விற்பனைக்கு இருப்பதாக கூறியவரை தாக்கி, அவரிடமிருந்த போலியான நாகமாணிக்க கல்லை அசல் கல் என நினைத்து பறித்து சென்ற கொள்ளையர்களில் ஒருவர் கைது – 2 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசனூத்து பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் சுப்பிரமணியன் (51) என்பவர் ஓசனூத்து பகுதியில் உள்ள பழைய கட்டிடத்திற்கு அருகே தான் நின்றுகொண்டிருந்தபோது தன்னை 9 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு, தன்னுடைய 2 செல்போன்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 4,000/-த்தை பறித்து விட்டு சென்றதாக நேற்று (27.08.2021) ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எதிரிகளை விரைந்து செய்ய மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துராஜா, காவலர் விசு உட்பட போலீசார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமாராக்களின் பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரிகளை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் ரோந்துப் பணி மேற்கொண்டபோது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சென்று கொண்டிருந்தவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஓட்டப்பிடாரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பவித்குமார் (24) என்பதும், மேற்படி புகார் அளித்த சுப்பிரமணியத்தை மிரட்டி பணம் பறித்த 9 பேரில் ஒருவர் எனவும், சுப்பிரமணியனின் உறவினர் என்பதும் தெரியவந்தது, மேற்படி சுப்பிரமணியன் தன்னிடம் விலையுயர்ந்த நாகமாணிக்க கல் உள்ளதாகவும், அதை விற்பனை செய்ய வேண்டும் என பவித்குமார் மற்றும் ஓசனூத்து பகுதியை சேர்ந்த முருகன் மகன் பழனிக்குமார் ஆகிய இருவரிடமும் கூறியுள்ளார். மேற்படி பழனிகுமார் சுப்பிரமணியத்திடம் தூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்த செல்வம்; மற்றும் மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த அரவிந்த் ஆகிய இருவரும் நாகமாணிக்க கல்லை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவிப்பதாகவும், அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு ஓசனூத்து பகுதியில் உள்ள பழைய கட்டிடத்திற்கு வருமாறு கூறியிருக்கின்றனர். இதை நம்பிய மேற்படி சுப்பிரமணியன் கடந்த 26.08.2021 அன்று தனது இருசக்கர வாகனத்தில் நாகமாணிக்க கல்லை எடுத்துகொண்டு அவர்கள் சொன்ன மேற்படி இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு மேற்படி பவித்குமார், பழனிகுமார், செல்வம், அரவிந்த், தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்தவர்களான பெரியதுரை, சரவணன், பிரகாஷ், புதியம்புத்தூரைச் சேர்ந்தவர்களான சிவக்குமார், ஆகாஷ், முத்தையாபுரம் பொட்டல்காடு பகுதியை சேர்ந்தவர்களான சிவா, இம்மானுவேல் மற்றும் வேல்முருகன் ஆகிய 12 பேர் அங்கு இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து சுப்பிரமணியத்தை கம்பு மற்றும் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி அந்த நாகமாணிக்க கல்லை பறித்து சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது, இதனையடுத்து தனிப்படைப் போலீசார் மேற்படி பவித்குமாரைக் கைது செய்து, அவரிடமிருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்த மற்ற எதிரிகளின் வாகன எண்களை வைத்து முகவரிகளை கண்டுபிடித்து அவர்களை தேடி செல்லும்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற 3 இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவான மற்ற எதிரிகள் 11 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் விசாரணையில் பவித்குமாரிடம் இருந்த விலையுயர்ந்ததாக கூறப்பட்ட நாகமாணிக்க கல் போலியானதும் என்பதும், சுப்பிரமணியன் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் போலியான கல்லை விலையுயர்ந்த நாகமாணிக்க கல் என்று கூறியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தானும் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்த புகார்தாரர் சுப்பிரமணியன் என்பவரும் தலைமறைவாகியுள்ளார்.
மேற்படி கொள்ளையர்களில் ஒருவரான பவித்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த போலி நாகமாணிக்க கல், 2 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.
மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களிடம் விலையுயர்ந்த நாகமாணிக்க கல், மண்ணுளி பாம்பு மற்றும் கலசம் இருப்பதாக கூறுபவர்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம், இதுபோன்றவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.