சென்னை – ஆகஸ்ட் – 17,2021
தண்டையார்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பேருந்தில் பயணம் செய்து வயதான பெண்களின் தங்க நகைகள் திருடிய 3 பெண்களை கைது செய்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் தனிப்படை காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கடந்த 26.7.2021 அன்று காமாட்சி, (பெ/70), என்பவருடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டு பேசிக் கொண்டு வந்த 3 பெண்கள், வண்ணாரப்பேட்டை, மகாராணி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்று காமாட்சி அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை திருடிச் சென்றனர். மேற்படி சம்பவம் குறித்து, காமாட்சி, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் அலமேலு, (பெ/75) என்பவருடன் பேருந்தில் வந்த 3 பெண்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அலமேலுவிடமிருந்து 2 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து அலமேலு கொடுத்த புகாரின்பேரில், H-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேற்படி குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத், இ.கா.ப., தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் காதர் மீரான், தலைமைக் காவலர்கள் அசோக்குமார் (த.கா.27169), சரவணகுமார் (த.கா.25944) மற்றும் மனுவேல் (த.கா.20315) ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1) கௌரி, (பெ/41), திண்டுக்கல் 2) சாந்தி (பெ/35), கோயம்புத்தூர் 3) சின்னதாய் (பெ/30), மதுரை ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.