சென்னை – ஆகஸ்ட் -17,2021
மதுரவாயல் பகுதியில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளை துரத்திச் சென்று பிடித்த பொதுமக்களான எட்வின் ஸ்மின்டோ மற்றும் பால்பாண்டி ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, வானகரம் பகுதியைச் சேர்ந்த எட்வின் ஸ்மின்டோ (வ/25), என்பவர் கடந்த 11.08.2021 அன்று, இரவு வேலம்மாள் பள்ளி அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு, செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது, அவ்வழியே ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் எட்வினின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். எட்வின் தனது இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளை துரத்திச் சென்றபோது, அவர்கள் செல்லும் வழியில் பால்பாண்டி (வ/30) என்பவரின் செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பினர். பால்பாண்டியும் அவரது இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளை துரத்திச் சென்றார். எட்வின் வானகரம், எஸ்.பி. ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு அருகே குற்றவாளிகளின் இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடிக்கவே, பின்னால் வந்த பால்பாண்டியும் பொதுமக்களுடன் சேர்ந்து குற்றவாளிகள் 1) நிர்மல்குமார் (வ/20),போரூர்2) விக்னேஷ் (வ/19),பூந்தமல்லி 3) ஹரிபிரசாத் (வ/19), பூந்தமல்லி ஆகியோரை பிடித்து, மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குற்றவாளிகளிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
செல்போன்பறிப்பு குற்றவாளிகளை, சம்பவத்தின்போதே மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்களான எட்வின் ஸ்மின்டோ மற்றும் பால்பாண்டி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.