தூத்துக்குடி – ஆகஸ்ட் – 30,2021
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு எதிரிகளை விரைந்து கைது செய்ய தனிப்படைகள் அமைத்து உத்தரவு – சம்மந்தப்பட்ட எதிரிகள் 6 பேர் உடனடியாக கைது – ஒரு அரிவாள், ஒரு கத்தி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் – கைது செய்த தனிப்படைபோலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப் I பெருமாள்நகரைச் சேர்ந்த சங்கர் மகன் ராமநாதன் (எ) ரமேஷ் (20) என்பவர் கடந்த 28.08.2021 அன்று இரவு தனது நண்பரான சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தை துரை மகன் டேவிட் (23) என்பவரது வீட்டு மொட்டை மாடியில் தனியாக தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் 29.08.2021 அன்று அதிகாலையில் மொட்டை மாடியில் ராமநாதன் (எ) ரமேஷ் மர்ம நபர்களால் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமநாதன் (எ) ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர்கள் சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டபோது இன்று சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்தவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் தூத்துக்குடி Pரூவு காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் 1) ராஜபாண்டி (21), தூத்துக்குடி பாளை ரோடு 3வது மைல் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் 2) முத்துக்குமார் (எ) முத்துப்பாண்டி (21) மற்றும் தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் 3) மூர்த்தி (எ) மீரான் (19), தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சேர்ந்த குழந்தைதுரை மகன் 4) டேவிட்ராஜ் (23), தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியை சேர்ந்த 5) 17 வயது இளஞ்சிறார் மற்றும் தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் மகன் 6) பரத் விக்னேஷ்குமார் (22) என்பதும், இவர்கள் 6 பேரும் கொலையான ராமநாதன் (எ) ரமேஷ் என்பவரின் நண்பர்கள், இவர்களுக்கும் கொலையுண்ட ராமநாதன் (எ) ரமேஷ் என்பவருக்கும் கடந்த 26.08.2021 அன்று தங்களது நண்பரின் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்டு மேற்படி 6 எதிரிகளும் சேர்ந்து ராமநாதன் (எ) ரமேஷ் என்பவரை நேற்று (29.08.2021) அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் மேற்படி எதிரிகள் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஒரு அரிவாள், ஒரு கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தனிப்படைப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி எதிரிகளில் ராஜபாண்டி என்பவர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், கஞ்சா வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி எதிரிகளான 17 வயதுடைய இளஞ்சிறார் உட்பட ராஜபாண்டி, முத்துக்குமார், டேவிட், மூர்த்தி, மற்றும் பரத் விக்னேஷ்குமார் ஆகிய 6 பேரையும் விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.