தூத்துக்குடி – ஆகஸ்ட் – 13,2021
செய்தியாளர் -எஸ்.எம்.பாரூக்
ரூ.𝟑𝟎,𝟎𝟎,𝟎𝟎𝟎/- மதிப்புள்ள திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலைய தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு
தனிப்படை அமைப்பு :
திருச்சி மாநகரில் சமீபகாலமாக நடைபெற்று வரும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வரும் திருடர்களை கண்டுபிடிக்க காவல் துணை ஆணையர்,குற்றம் மற்றும் போக்குவரத்து,முத்தரசு மேற்பார்வையில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பிறமாவட்டங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருச்சி புங்கனூர், காந்திநகரை சேர்ந்த கிரிநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 39 இருசக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றவாளிகள் கைது :
மேலும் அண்ணாசிலை பேருந்துநிறுத்தம் அருகில் 55 வயது பெண் ஒருவரிடம் அவரது கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த 3½ பவுன் தங்கசெயின், சத்திரம் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த 50 வயது பெண்மணியிடம் 4¾ பவுன் தங்க செயின், சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 47 வயது பெண்மணியிடம் 4 பவுன் தங்க செயின் 2, 1 பவுன் மோதிரம் ஒன்று, சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 57 வயது பெண்மணியிடம் 3¾ பவுன் தங்க செயின், மற்றும் N.S.B. ரோட்டில் உள்ள தனியார் நகைக்கடையில் நகை வாங்க வந்த வயதான தம்பதியினரின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க செயின் திருட்டு ஆகிய குற்றவழக்கில் ஈடுபட்ட ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண் எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 22 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பெரியகடைவீதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 சவரன் தங்க நகையை திருடி சென்ற எதிரியை 6 மணிநேரத்திற்குள் கண்டுபிடித்து களவு போன நகை பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் கமிஷனர் பாராட்டு:
மேற்படிதிருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட நான்கு எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் முப்பது இலட்சம் மதிப்புள்ள 39 இருசக்கர வாகனங்கள் மற்றும் 25பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் மற்றும் மாநகர விரல் ரேகை பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து பணிப் பாராட்டு சான்றிதழ் மற்றும் பணவெகுமதி அளித்து வெகுவாக பாராட்டினார்