சென்னை – ஜீலை – 26,2021
கீழ்பாக்கம் பகுதியில் இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய 3 குற்றவாளிகளை கைது செய்த, கீழ்பாக்கம் காவல்துறையினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கீழ்பாக்கம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர்.ரெஜின் (மு.நி.கா.29043) என்பவர் 12.7.2021 அன்று இரவு ரோந்து பணியில் நள்ளிரவு நேரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் டெய்லர்ஸ் சாலை சந்திப்பு அருகே வந்தபோது, கார்த்திக் என்பவர் காவலரிடம் வந்து, இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் தன்னிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தனது செல்போனை பறித்துச் சென்றதாக கூறினார். காவலர் ரெஜின் குற்றவாளிகளின் அடையாளங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவெண் மற்றும் அடையாளங்களை கேட்டறிந்து, இரவு ரோந்து பணியிலிருந்த மற்ற காவலர்களிடம் தெரிவித்தார். தலைமைக் காவலர் பென் அரவிந்த் சாம் (த.கா.27873) மற்றும் முதல்நிலைக் காவலர் திருக்குமரன் (மு.நி.கா.40048) ஆகியோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டார்கள். இந்நிலையில் கீழ்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 3 நபர்களை மேற்படி காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.ஆதிபகவான் (எ) தாஸ் (வ/24) சென்டிரல் இரயில் நிலைய பிளாட்பாரம், 2.ராஜேஷ் (எ) கோவிந்தா (வ/19) கோயம்பேடு, 3.திவாகர் (எ) கருப்பு (வ/24) கோயம்பேடு என்பதும், சற்று முன்பு மூவரும் சேர்ந்து ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வரும் வழியில் கீழ்பாக்கம் பகுதியில் கார்த்திக்கிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து, செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த, G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் பென் அரவிந்த் சாம், முதல்நிலைக் காவலர்கள் ரெஜின் திருக்குமரன் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., 24.7.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.