திருச்சி – ஜீலை – 27,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
கஞ்சா கடத்தி வந்த நபரைப் பிடிக்க உயிரைப் பணயம் வைத்து திரைப்படக் காட்சி போல் தனிப்படை போலீஸார் விரட்டி பிடித்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாநகர், சமீபகாலமாகவே கஞ்சா மற்றும் குட்காவின் கூடாரமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தாராளமாகக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
பள்ளி மாணவர்கள் பலர் இந்த போதைப்பொருள்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த போதைப்பொருள்களால் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ரெளடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது என்று பரவலாகப் பேச்சுக்கள் அடிப்பட்டுக்கொண்டிருக்கிற நிலையில், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிப்பதில் திருச்சி மாவட்ட போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கென மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், எஸ்.பி மூர்த்தி தலைமையில் ஒரு டீம் அமைக்கப்பட்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் கஞ்சா கடத்திச் செல்வதாக கமிஷனரின் தனிப்படை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளன. அதன் பெயரில் மன்னார்புரம் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு டாட்டா இண்டிகா காரை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் காரை ஓட்டிச் சென்ற நபர் நிறுத்தாமல் வண்டியை வேகமாக ஓட்டிச்செல்ல, உடனே அந்த காரை போலீஸார் டூவிலரில் விரட்டி சென்றனர். செந்தண்ணீர்புரம் அருகே கார் படுவேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது, போலீஸ் ஏட்டு சரவணன் என்பவர் டூவிலரிலிருந்து காரின் மீது ஏறி குதித்து காரின் பேனட்டை பிடித்துக் கொண்டார். ஆனாலும் அந்த நபர் காரை நிறுத்தாமல் மிகவேகமாக ஓட்டியிருக்கிறார்.
சரவணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் காரின் முன்பக்க பேனட்டில் படுத்தபடியே இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில், அந்த காரைப் பிடிக்க பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காரை துரத்திச் சென்றனர். கடைசியில் சரவணன் ஒரு கையால் காரின் ஸ்டேரிங்கை பிடித்து வளைத்த போது கார் தடுப்பு மரத்தின் மீது மோதி நின்றது.
இதில் சரவணன் காயம் அடைந்தார். பின்னால் வந்த போலீஸார் காரை ஓட்டிவந்த டிரைவரை மடக்கிப் பிடித்தனர். காயமடைந்த ஏட்டு சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
காரை ஓட்டிவந்தது யார்? என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம்.”காரை ஓட்டி வந்தவர் புதுக்கோட்டைச் சேர்ந்த முகமது அனீபா. இவர் காரில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து எடுத்து வந்துள்ளார். பிடிபட்டால் பிரச்னை ஆகிவிடும் என்பதால் போலீஸார் தடுத்தும் காரை நிறுத்தாமல் சென்றிருக்கிறார். அதன் பிறகு தான் பின்தொடர்ந்து அவரை மடக்கிப் பிடித்து கைது செய்திருக்கிறோம். முகமது அனீபா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம். மேலும் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றார்.