தூத்துக்குடி – ஜன – 13 , 2021
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மீனாட்சிப்பட்டி அடைக்கலாபுரம் கல்குவாரி குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு, கொலை செய்த இருவர் கைது. எதிரிகளை 24 மணி நேரத்தில் விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிப்பட்டி அருகேயுள்ள அடைக்கலாபுரம் கிராமத்தில் உள்ள கல்குவாரி குளத்தில் நேற்று ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு, இறந்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவும், அவர் எப்படி இறந்துள்ளார் என்பது குறித்தும் விசாரணை செய்ய ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், வசந்த குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மேற்படி அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் பட்டான்டிவிளை, ஆதித்தனார் தெருவைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் முத்துச்செல்வம் (19) என்பதும், இவருக்கும் சிவத்தையாபுரம் சர்ச் தெருவைச் சேர்ந்த சைரன் மணிராஜ் மகன் ஞான ஸ்டாலின் (23) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையில் ஞான ஸ்டாலின் மற்றும் சிவத்தையாபுரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் அமல்ராஜ் (23) என்பவருடன் சேரந்து முத்துச்செல்வத்தை கல்லால் தாக்கி, முத்துசெல்வத்தை மரக்கதவில் வைத்து கம்பியால் கட்டி கல்குவாரியில் வீசியது தெரியவந்தது.
இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் வழக்கு பதிவு செய்து ஞான ஸ்டாலின் மற்றும் அமல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
இவ்வழக்கில் கல்குவாரி குளத்திலிருந்து மீட்கப்பட்ட உடல் மிகவும் மோசமாக இருந்த நிலையில் மிகுந்த சிரமத்திற்கிடையில் இறந்தவர் முத்துச்செல்வம் என்பதை கண்டுபிடித்தும், 24 மணி நேரத்தில் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் தலைமையிலான தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ் . ஜெயக்குமார் பாராட்டினார்.