தூத்துக்குடி -ஜன – 13 , 2021
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரு இடங்களில் புதிதாக சிசிடிவி கேமரா நிறுவுதல், பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் விழா ஆகியவை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.எஸ் ஜெயக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலையத்தில் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காவல் நிலைய காவலர்களுக்கு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்மாபட்டி பகுதியில் பொதுமக்கள் சார்பில் புதிதாக நிறுவப்பட்ட 5 சிசிடிவி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்து கம்மாபட்டி பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் சாலை விதிகளை மதித்து எப்போதும் வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கம்மாபட்டி ஊர் தலைவர் பிரான்சிஸ் மற்றும் துணைத்தலைவர் ஆண்ட்ரோஸ் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டி குறிச்சி பகுதியில் பொதுமக்கள் சார்பில் புதிதாக நிறுவப்பட்ட 8 சிசிடிவி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன் அப்பகுதியில் பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பொங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கிருஷ்ணசாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன் பாண்டியன் மற்றும் ஊர் தலைவர் மற்றொரு கிருஷ்ணசாமி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
பின்னர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓலைகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் பொங்கல் பானைக்கு தீபம் பற்ற வைத்து சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது ஓலைகுளம் பகுதியில் சமத்துவ பொங்கல் ஏற்பாடு செய்து பொங்கல் விழா நடத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் உங்களுக்குள் பிரச்சினை ஏதும் இல்லாமல் நீங்கள் எப்போதும் இதே போன்று மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதோடு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி மற்றும் துணைத் தலைவர் தங்கப்பாண்டி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக் கதிரவன், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.